டாக்டர் அம்பேத்கர் பார்வையில் சிறுபான்மையினரும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும்

(சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பொருளியல் ஆய்வு நிலையத்தின் சார்பாக ஆண்டுதோறும் டிசம்பர் 6 அன்று டாக்டர் அம்பேத்கர் நினைவு சொற்பொழிவு நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு சொற்பொழிவாற்ற நான் அழைக்கப்பட்டிருந்தேன். நான் அங்கு ஆற்றிய உரையை சிறிய மாற்றங்களுடன் இங்கே அளிக்கின்றேன்)ஆன்றோர்களும் சான்றோர்களும் கூடியிருக்கும் இந்த கண்ணியமிக்க அவையில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நினைவுச் சொற்பொழிவாற்றும் இந்த வாய்ப்பை, இந்த சிறப்பை எனக்குக் கொடுத்தற்காக எனது நீண்ட கால நண்பர் முனைவர் எம். தங்கராஜ் அவர்களுக்கும், பொருளாதார ஆய்விற்கான டாக்டர் அம்பேத்கர் ஆய்வு மையத்தின் பேராசிரியர்களுக்கும் முதற்கண் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த தலைப்பிலே உரையாற்றுவதில் இந்த பல்கலைக்கழகத்தின் பழைய மாணவன் என்பதிலே நான் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் அறிவார்ந்த தளத்திலும் அரசியல் தளத்திலும் இந்தத் தலைப்பு சுட்டிக்காட்டும் விஷயங்கள் அலட்சியப்படுத்தப்படுவது மிகவும் துரதிருஷ்டவசமானது.இன்றைய தினமானது, இந்த டிசம்பர் ஆறு, நவீன இந்தியாவின் அறிவுசால் சிற்பி பாபா சாஹிப் டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினமாக உள்ளது. இந்த தேசத்தின் சிறுபான்மையினரின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சளைக்காமல் போராடிய மாமனிதர் அவர். இந்தியாவின் மதச்சார்பின்மையை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் பாசிச சக்திகளால் வழிப்பாட்டு உரிமையின் குறியீடாக இருந்த பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட கறுப்பு நாளும் இதுவாக உள்ளது. எனவே சிறுபான்மையினர் பற்றியும், அவர்களுக்கான விகிதாச்சார பிரதிநிதித்துவத்தையும் பேசவேண்டிய மிகச்சரியான நாள் இதுவே என்று நான் கருதுகிறேன். விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கிய தேர்தல் அமைப்பை உறுதியாக ஆதரிப்பவராக பாபாசாஹிப் இருந்தார். அவருடைய குரலை நாம் மதித்திருந்தால் பாபர் பள்ளிவாசல் இடிப்பட்டிருக்காது; தர்மபுரியில் இரத்தம் சிந்தப்பட்டிருக்காது; வன்முறை நடந்திருக்காது. இந்திய தேர்தல் முறை அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறதா?

விடுதலைப் பெற்ற இந்தியாவின் ஜனநாயகத்துக்கு 65 வயதாகிறது. இந்த உலகில் உள்ள ஜனநாயக நாடுகளில், மிக அதிக மக்கள்தொகையைக் கொண்ட குடியரசு நமது தான். என்றாலும், ஜனநாயகத்தின் அடிப்படையான ”மக்களால், மக்களைக் கொண்டு, மக்களுக்காக,” என்ற வரையறை நம் நாட்டில் பின்பற்றப்படுகிறதா என்று மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் பார்க்கலாம். மாறாக, ”செல்வமும் அதிகாரமும் உள்ளவர்களால், செல்வமும் அதிகாரமும் உள்ளவர்களைக் கொண்டு, செல்வமும் அதிகாரமும் உள்ளவர்களுக்காக” என்றல்லவா அது மாறிப்போயுள்ளது! நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை நாம் அனுப்புகிறோம் என்பது உண்மைதான். ஆனாலும் பலதரப்பட்ட மக்களைக் கொண்ட இந்தியாவை உண்மையிலேயே அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்களா? இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. உதாரணமாக, தாரு, போக்சா, ஹேலா, ஹலால்கோர், முஷாஹர், கோல், வால்மீகி போன்ற பல சமூகத்தினருக்கு இன்றுவரை நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் கிடையாது.

சத்திஸ்கர், குஜராத், ஹர்யானா, ஒரிஸ்ஸா, ஜார்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற பெரிய மாநிலங்களைப் பிரதிநித்துவப்படுத்தும் ஒரு முஸ்லிம்கூட தற்போதைய மக்களவையில் கிடையாது. ஆனால் இம்மாநிலங்களில் நியாயமான, கணிசமான அளவு முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ஆந்திரப்பிரதேசம், அஸ்ஸாம், பிஹார், கேரளா, உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மக்களவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம், இம்மாநிலங்களின் மொத்த மக்கள்தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது, நியாயமற்ற வகையில் மிகமிகக் குறைவாகவே உள்ளது. இன்னொரு வகையிலும் என் கருத்தை நிரூபிக்கலாம். ஜம்மு காஷ்மீர், சத்தீஷ்கர், ஜார்கண்ட ஆகிய மாநிலங்களில் ஜனநாயக பற்றாக்குறை இருப்பதை தற்போதைய FPTP –வேட்பாளர்களில் கூடுதல் வாக்குகளைப் பெறுபவர் மட்டுமே வெற்றியாளர் என்ற தேர்தல் முறை நிரூபித்துள்ளது.

பொதுமக்களின் விருப்ப வாக்களிப்பின் அடிப்படையில் தான் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்றால், பஸ்தரில் உள்ள ஆதிவாசிகள் ஏன் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்? ஏன் சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாகிறார்கள்? ஏன் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகிறார்கள்? ஏன் ஜார்கண்டில் உள்ள ஆதிவாசி அரசால் ஆதிவாசிகளின் நலன்களுக்காகப் பாடுபட முடியவில்லை? ஏனென்றால், சிறுபான்மை மக்கள் எக்கேடுகெட்டாலும் பரவாயில்லை, பெரும்பான்மை மக்களை குஷிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அது அமைக்கப்படுவதே காரணமாகும். பாபாசாஹிபின் வார்த்தைகளில் சொல்வதானால், “பெரும்பான்மையினரின் கொடுங்கோன்மை" தான் காரணமாகும.சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் தற்போதைய தேர்தல் முறை தற்போதைய இந்திய தேர்தல் அமைப்பில் நிலம் சார்ந்த, பூகோள அமைப்பு சார்ந்த வாக்காளர் தொகுதிகள் உள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து ஒரு பிரதிநிதிதான் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் போன்ற மக்கள் பிரதிநிதித்துவ அவைக்கு அனுப்பப்படுகிறார். அவர் மற்றவர்களைவிட அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றவராக இருப்பார். இதைத்தான் first-past-the-post அல்லது FPTP அதாவது மற்ற வேட்பாளர்களை விட கூடுதல் வாக்குகளை பெறுபவருக்கே எல்லாம் அல்லது முதல் தேர்வு பெரும்பான்மை என்று அழைக்கப்படுகின்றது. இந்த FPTP தேர்தல் முறையை பெரும்பான்மையான இந்தியர்களும் அமெரிக்கர்களும் அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த முறைக்கு மாற்றாக வேறு தேர்தல் முறைகள் உள்ளன என்பதை அவர்கள் கற்பனைகூடச் செய்வதில்லை.

FPTP தேர்தல் முறையில் உள்ள மிகப் பெரும் குறை என்னவெனில் திட்டமிட்ட வகையில் சிறுபான்மையினருக்கு மிகமிகக் குறைவான அளவிலே பிரதிநிதித்துவம் கிடைக்கும் சூழல் ஏற்படுத்தப்படுகின்றது. பூகோள அடிப்படையில் ஒரே இடத்தில் சமூக ரீதியான சிறுபான்மையினர் குவிந்திருக்கும் இடத்தில் இந்த தேர்தல் முறை பிரதிநிதித்துவத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தாது. ஆனால் இந்தியாவில் உள்ளது போல தலித்கள், முஸ்லிம்கள் போன்றும், அமெரிக்காவில் ஆப்ரோ அமெரிக்கர் எனப்படும் கறுப்பு நிறத்தினர் போன்றும், சிறுபான்மையினர் நாடு முழுவதும் பரவலாக பிரிந்து வாழும் போது இந்த தேர்தல் முறை விபரீத விளைவுகளை ஏற்படுத்தி விடும். ஏனெனில், பெரும்பான்மையினராக இருக்கும் அமெரிக்க வெள்ளையர்கள் அல்லது இந்தியாவின் ஆதிக்க சாதியினர் தான், யார் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் சிறுபான்மையினர் புறந்தள்ளப்பட்டு அவர்களுக்கு மக்களவையில பிரதிநிதித்துவமே இல்லாத சூழல் ஏற்படுத்தப்படும்.

உதாரணமாக, இந்திய முஸ்லிம்களைப் பொருத்தவரை, அவர்களது மொத்த மக்கள் தொகைக்கும் குறைவான விகிதத்தில்தான் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவமும் கிடைக்கிறது. நடப்பு நாடாளுமன்றத்தின் மக்களவையில் உள்ள 545 எம்.பி.க்களில் 29 பேர் மட்டுமே முஸ்லிம்கள். அதாவது 5.34 விழுக்காடு பிரதிநிதித்துவம் மட்டுமே முஸ்லிம்களுக்கு கிடைத்துள்ளது. அமெரிக்காவில் கருப்பு நிறத்தவர்களின் மக்கட்தொகை 12 விழுக்காடாக இருப்பினும் அந்நாட்டு மக்களவையில் (காங்கிரஸில்) கருப்பர்களின் பிரநிதித்துவம் 7.4 விழுக்காடு மட்டுமே. இதே போல் அங்கு வாழும் லத்தீனோக்கள் (லத்தீன் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவர்கள்) மக்கட்தொகை 10 விழுக்காடாக இருந்த போதினும் மக்களவையில் அவர்களின் பிரதிநிதித்துவம் 3 விழுக்காடு மட்டுமே. அமெரிக்காவில் உள்ள வெள்ளையர்கள் இன்னும்கூட கருப்பின மக்களுக்கோ, லாடினோக்களுக்கோ, மற்ற சிறுபான்மையின மக்களுக்கோ வாக்களிக்கத் தயங்குகின்றனர். இந்த குறைவான விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் வருங்காலத்தில் இன்னும் குறையுமே தவிர அதிகரிக்காது.

தனித் தொகுதிகள் தலித்களுக்கு பயன் அளிக்கின்றவா? இந்தியாவில் வாழும் தலித்துகளைப் பொருத்தவரை, இந்த பிரதிநிதித்துவமின்மை பல வடிவங்களை எடுக்கவல்லது. தனித் தொகுதிகள் ஒதுக்கீட்டின் காரணமாக, தலித்துக்களுக்கு அவர்கள் மக்கள் தொகைக்கு ஏற்றவாறான பிரதிநிதித்துவம் கிடைக்கிறது. ஆனாலும் இது உண்மையான பிரதிநிதித்துவம் அல்ல. ஏனெனில் இது ஆதிக்க சாதி பெரும்பான்மையினரால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அவர்களது அரசியல் மற்றும் சமூக ரீதியான கருத்துக்கள் பெரும்பாலான தலித்துகளின் கருத்துக்களிலிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை, மாறுபட்டவை. உதாரணமாக, 1996 தேர்தல் நடைபெற்ற வேளையில் பட்டியலின வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்ட 40 விழுக்காடு இடங்களில் பாஜக வென்றது. பத்து விழுக்காடு தலித்துகள் மட்டுமே அவர்களை ஆதரித்தனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. தற்போதைய FPTP அமைப்பு ஆதிக்க சாதி மக்களின் வாக்குகளின் மூலம் தலித் சமூகத்திலிருந்து ஒரு சில தனி மனிதர்கள் நாடாளுமன்றத்துக்கோ சட்டமன்றங்களுக்கோ செல்ல உதவுகிறது. ஆனால் இவர்களில் கணிசமானவர்கள் தலித் சமூகத்தின் மேம்பாட்டிற்காக முழு அர்பணிப்புடன் உழைப்பதில்லை. உண்மையில் தங்கள் சாதி அடையாளங்களை துறப்பதற்கே இவர்கள் முயலுகின்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாட்டில் நடந்த ஒரு சமீபத்திய நிகழ்வைக் குறிப்பிட விரும்புகிறேன். தர்மபுரி மாவட்டத்தில், ஒரு தலித் வாலிபர் ஒரு வன்னியப் பெண்ணோடு ஓடிப்போனார் என்ற தகவலைப் பயன்படுத்தி அந்த மாவட்டத்தில் இருந்த மூன்று கிராமங்கள் சூறையாடப்பட்டன; மிருகத்தனமாக தாக்கப்பட்டன. பட்டியலினத்திற்கான தனித் தொகுதிகளிலிலிருந்து வென்ற 44 உறுப்பினர்கள் தமிழக சட்டமன்றத்தில் உள்ளனர். ஆனால் அவர்கள் ஒட்டுமொத்தமாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலே இந்தப் பிரச்சனையை சட்டமன்றத்தில் எழுப்ப முடியவில்லை. நான் அவர்களைக் குறைகூறவில்லை. இன்றைய தேர்தல் அமைப்பு முறை அதற்கு வழிவகுக்கவில்லை என்றே கூறுகிறேன்.

இந்த FPTP அமைப்பின்படி முஸ்லிம்களும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். 1980ல் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட வரலாற்றுப் புகழ்மிக்க மண்டல் ஆணையத்தின் அறிக்கையின் பரிந்துரைகளைச் செயல்படுத்த ஒன்பது ஆண்டுகள் ஆயின. 1983ன் கோபால்சிங் குழு அறிக்கையின் கதியும் இப்படியே ஆனது. இன்று நீதியரசர் சச்சார் குழு அறிக்கை உள்ளது. அதன் சிபாரிசுகள் தீவிரமாக செயல்படுத்தப்படவில்லை. சில ஆயிரம் உதவித்தொகை வழங்குதல்களோடு அது முடித்துக்கொள்ளப்பட்டது. அத்தொகையும் நடப்பு ஆண்டுக்குள் கொடுத்து முடிக்கப்படாமலே உள்ளன. மேனாள் இந்தியத் தலைமை நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான மத மற்றும் மொழி வழி சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கையும் தூசி படிந்து கிடக்கிறது. 1950க்குப் பிறகான இவ்விதமான நூற்றுக்கணக்கான அறிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அதிகார வர்க்கத்தின் நினைவில் அவை இல்லை.

1992-93 மும்பபை கலவரம் தொடர்பான நீதியரசர் ஸ்ரீ கிருஷ்னா அறிக்கை என் நினைவுக்கு வருகிறது. அந்த அறிக்கையின் பரிந்துரைகளும் இன்றுவரை செயல்படுத்தப்படவில்லை. ஒரு இராணுவ தளபதி போல கலவரங்களை முன்னின்று நடத்தியதாக பால் தாக்கரேயை அது குற்றம் சாட்டியது. ஆனாலும் பால் தாக்கரே இறந்தபோது அவர் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார். நீதியரசர் எம்.எஸ். லிபர்ஹான் ஆணையத்தின் அறிக்கை பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டது குறித்து 17 ஆண்டுகளாக ஆராய்ந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அறிக்கை சமர்ப்பித்தது. 63 தனி மனிதர்களை குற்றவாளிகள் என்று சொன்னது. அதில் எல்.கே.அத்வானியும் அடக்கம். ஆனால் இதுவரை குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மக்கள் வாயை மூட மட்டுமே அரசாங்கத்தால் ஆணையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இந்த பாரபட்சங்களையெல்லாம் மீறி நியாயத்தை எடுத்துச் சொல்லி செயல்பட வைக்க தேர்ந்தெடுக்கப்படும் முஸ்லிம் பிரதிநிதிகளால் முடியவில்லை.

இப்படி சிறுபான்மையினர் முடக்கப்படுவார்கள் என்பதுதான் அம்பேத்கரின் அச்சமாக இருந்தது. அதுதான் நம் நாட்டில் இன்று நடந்து கொண்டிருக்கிறது. இப்போது இருக்கும் FPTP அமைப்பின் மூலமாக சிறுபான்மையினருக்கும் தலித்துகளுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காது என்றே அவர் உறுதியாக நம்பினார். 1919ல், சவுத் போரோ கமிட்டியில் அவர் சாட்சியம் சொன்னபோது, இந்தப் பிரச்சனையை அவர் முன்வைத்தார். உண்மையான சமூகப் பிரிவினை என்பது இந்தியாவில் ஆதிக்க சாதி இந்துக்களுக்கும், தீண்டத்தகாதவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், பார்சிகளுக்கும், யூதர்களுக்குமானது என்று கூறினார். மேற்கண்ட குழுக்களிலிலிருந்து வாக்காளர்களை ஒருங்கிணைக்கும் தொகுதிகளில் ஒருவரை தன் பிரதிநிதி என பெரும்பான்மையான வாக்காளர்கள் தேர்ந்தெடுப்பர். அப்படித் தேர்ந்தெடுக்கப்படுபவர் அவர்களின் உண்மையான பிரதிநிதியா? அவர் அத்தொகுதியின் மனநிலையைப் பிரதிபலிப்பவரா? அத்தொகுதியின் அனைத்து நலன்களையும் அவர் கருத்தில் கொள்பவரா?என்று அம்பேத்கர் கேள்வி எழுப்பினார். இக்கேள்விகளுக்கு அம்பேத்கரின் உறுதியான பதில் அழுத்தமான இல்லை என்பதுதான் (Dr. Ambedkar Writings and Speeches, பாகம் 1, பக்கம் 250).

அன்று பாபா சாஹிப் சொன்னதைத் தான் இன்று தேர்தல் சீர்திருத்தவாதிகள் கூறுகிறார்கள் 1930ல் வட்டமேஜை மாநாட்டில் அவர் இந்த கேள்வியை முன்வைத்தபோது, இன்று நாம் FPTP என்று சொல்லும் தேர்தல் முறையை அவர் கடுமையாக விமர்சித்தார். அப்போது எழுதிய ஒரு குறிப்பில் அவர், சிறிய அளவிளான சிறுபான்மையினருக்கும் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் பெரும்பான்மையினரையும் கொண்ட ஒரு இணைந்த தேர்தல் தொகுதியானது சிறுபான்மையினருக்கு பாதகமாகவே முடியும் என்று எழுதினார். சிறுபான்மையினரால் முன்நிறுத்தப்படும் ஒருவர், தன் சமூகத்தைச் சேர்ந்த அனைவராலும் ஆதரிக்கப்பட்டாலும் வெற்றிபெற முடியாது. ஒரே ஒரு இடமே சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும், அந்த இடத்துக்கு பெரும்பான்மையினர் ஒரு சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்தி ஆதரித்தால் அவரை வெற்றிபெற வைக்கமுடியும். இப்படி வெற்றி பெறும் ஒரு சிறுபான்மைச் சமூகத்தவர், சிறுபான்மையினரின் நலனுக்காக பாடுபடுவராக இல்லாமல், தன்னை வெற்றிபெற வைத்த பெரும்பான்மையினரின் கைப்பாவையாக மாறிப்போவார் என்று அன்றே தீர்க்கமாக கூறினார் (அதே புத்தகம், பாக, 5, பக்கம் 347).

FPTP தேர்தலை முறை பற்றி உலகெங்கிலும் எழுந்துள்ள விமர்சனத்தை இது எதிரொலிக்கிறது. 1930களில் அம்பேத்கர் சொன்னதைத்தான் இன்று விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம அதாவது Proportional Representation பற்றிப் பேசுபவர்களும் கூறுகிறார்கள். பூகோள அடிப்படையில் அமைந்த தொகுதியிலிருந்து ஒருவரே பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற நிலையில் தனித் தொகுதியிலிருந்து வெற்றி பெறுபவர் அவரை வெற்றி பெற வைத்த பெரும்பான்மையினரின் கைப்பாவையாக செயல்படுவார் என்று விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் ஆதரவாளர்கள் இன்று கூறி வருகின்றார்கள்.

இத்தகைய அவல நிலையை நீக்குவதற்கு இருக்கும் ஒரே வழி தற்போதைய தேர்தல் முறையான FPTP நீக்கிவிட்டு PRS என்னும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையை செயல்படுத்துவதில் தான் அமைந்துள்ளது. இந்த மாற்றத்தின் பயனாக தமது விகிதாச்சாரத்துக்கும் குறைவான விழுக்காட்டில் பிரதிநிதித்துவம் பெற்று வரும் சிறுபான்மையினருக்கு நியாயம் கிடைக்கும். நமது ஜனநாயக அமைப்பின் குறைபாடுகள் களையப்பட்டு சீர்செய்யப்படும். நமது நாட்டின் வரைவு அரசியலமைப்புச் சட்டத்தில் (Draft Constitution) இடம் பெற்றிருந்த பிரிவுகள் 292 மற்றும் 294ல் சொல்லப்பட்டிருந்தது போல் முஸ்லிம்களுக்கும், தலித்துகளுக்கும், ஆதிவாசிகளுக்கும், பழங்குடியினருக்கும், மற்ற தாழ்த்தப்பட்ட அனைத்து ஒடுக்கப்படும் மக்களுக்கும் நியாயமான விழுக்காட்டில் பிரதிநிதித்துவம் கிடைக்கும். ஆனால் வரைவு அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றிருந்த இந்த இரு பிரிவுகளும் 1949 மே மாதம் கைவிடப்பட்டன. இப்பிரிவுகள் கைவிடப்பட்டது குறித்து பண்டிதர் நேரு மகிழ்ச்சி அடைந்து "நமது விதியில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட திருப்பம்" என்று அதை வர்ணித்தார். 1928ல் அவர் அளித்த அறிக்கையை யாரும் அப்போது நினைத்துப் பார்க்கவில்லை.. அதில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் பேசப்பட்டிருந்தது. “விகிதாச்சார பிரதிநிதித்துவம் மட்டுமே பலதரப்பட்ட சமூகத்தினரின் அச்சங்களைப் போக்கும் அறிவார்ந்த ஒரே வழியாக இருக்கும். அது ஒன்றே நம் பிரச்சனைகளைத் தீர்க்கும்" என்று அதில் நேரு கூறியிருந்தார்.. (ஜவஹர்லால் நேரு, யங் இந்தியா, 15 மே, 1930).

தேர்தல் சீர்திருத்தத்திற்கு தேவை என்ன?

ஜனநாயகத்தில் சிறுபான்மையினருக்கு குறிப்பாக தலித்களுக்கு உரிய அந்தஸ்து என்ன என்பதும் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை அதில் பெறுவதற்கான வாய்ப்பு என்னவென்பதும் தான் பாபா சாஹிபின் உளமார்ந்த கேள்வியாக இருந்தது.. தீண்டத்தகாதவர்கள் என்ற வகையில் அவர்ணாக்களை தீண்டத்தகுந்தவர்கள் என்ற சவர்ணாக்கள் மனிதர்களுக்கும் “குறைவானவர்களாக” நினைப்பதால், தீண்டத்தகுந்தவர்கள் (சவர்ணர்கள், வர்ணமுடையவர்கள்) அனுபவிக்கும் எல்லா பலன்களையும் உரிமைகளையும் அவர்களால் அனுபவிக்க முடியவில்லை என்பதும் அவரது கவலையாக இருந்தது. எனவே சாதியத்திற்கு எதிரான கோட்பாடான ஜனநாயகத்தில் அனைவரும் சமமானவர்களே என்ற அடிப்படையில் ஒருவருக்கு ஒரு ஒட்டு என்றிருப்பது பலதரப்பட்ட சிறுபான்மையினர் வாழும் இந்திய சூழலுக்கேற்ப சீர்திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்ற பாபா சாஹிப் கருதினார். எனவே இந்தியாவில் ஜனநாயகம் எதிர்கொள்ளும் இந்த சூழலில் மற்றவர்களுக்கு சமமாக மதிக்கப்படாத ஒரு தலித்தின் நிலையை உயர்த்துவதற்காக இரட்டை வாக்குகள் அல்லது ஒதுக்கீடு போன்ற சிறப்பு வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்று பாபா சாஹிப் வாதித்தார். எனவே சிறுபான்மையினருக்கு அவர்களது மக்கள் தொகைக்கும் அதிகமான பங்கு பிரதிநிதித்துவம் கொடுக்கவேண்டும், அப்போதுதான் பெரும்பான்மையினரின் அராஜகம், கொடுங்கோன்மை ஒழியும் என்று அம்பேத்கர் வாதிட்டார்.

அரசியலமைப்பு நிர்ணயச் சபைக்கு (Constituent Assembly) அவர் தேர்ந்தெடுக்கப்படுவது பிரச்சனையானபோது, மார்ச் 1947ல் அம்பேத்கர் States and Minorities: What are Their Rights and How to Secure them in the Constitution of Free India (அரசுகளும் சிறுபான்மையிரும்: அவர்களது உரிமைகள் என்ன? விடுதலை பெற்ற இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தில் அதனை உறுதிப்படுத்துவது எப்படி?) என்ற ஒரு கோரிக்கை மனுவை மார்ச் 1947ல் தயாரித்து மே 1947ல் அதை வெளியிட்டார். "ஒன்றுபட்ட இந்திய மாநிலங்களின் அரசியலமைப்பு" என்ற பெயரில் வரையப்பட்ட அந்த மனு அவருடைய அறிவார்ந்த, புரட்சிகரமான போக்கைக் காட்டியது.

அம்பேத்கரின் ஸ்டேட்ஸ் அண்டு மைனாரிட்டீஸ் என்ற அந்த லட்சிய அரசியலமைப்பு சட்ட வரைவின் மையக்கருத்தாக சிறுபான்மையினருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற அவருடைய உந்துதல் அமைந்து இருந்தது. FPTP அமைப்பில் உருவாகும் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அம்பேத்கருக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்ததில்லை. குறிப்பாக பலதரப்பட்ட சிறுபான்மையினர் உள்ள ஒரு சமூக அமைப்பில், விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ அடிப்படையிலான தேர்தல் வெற்றி சிறுபான்மையினருக்குத் தேவையான நியாயத்தை வழங்கிவிடும் என்று அவர் நினைக்கவில்லை. முஸ்லிம்கள், தலித்துகள், ஆங்கிலோ இந்தியர்கள், சீக்கியர்கள் போன்ற சிறுபான்மையினருக்கு அவர்கள் விகிதாச்சாரத்துக்கும் அதிகமான அளவில் சட்ட மன்றங்களில் பிரதிநிதித்துவம் வேண்டும், அப்போதுதான் அவர்கள் பெரும்பான்மையினரால் நசுக்கப்படமாட்டார்கள் என்று அவர் நினைத்தார். FPTPயும் ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற கோட்பாடும் சமூக பொருளாதார சமத்துவம் நிலவும் சூழலில் மட்டுமே பயன் தருமென்று அவர் நினைத்தார். மேல் சாதியினருக்கு மரியாதையும் கீழ் சாதியினருக்கு அவமரியாதையும் இருக்கும் இந்தியச் சூழலில், சிறுபான்மையினருக்கு நியாயம் கிடைப்பது சாத்தியமில்லை என்றே அவர் கருதினார். 1931 வட்ட மேசை மாநாட்டில் அவர் ஒருமுறை குறுக்கிட்டபோது இதைத்தான் வலியுறுத்தினார்.

வட்ட மேசை மாநாட்டில் தலித்துகளுக்கென வென்ற உன்னதமான இரட்டை வாக்கு முறையின் பின்னால் இருக்கும் அடிப்படைக் காரணமும் இதுதான். இதன் விளைவாக 1932 ஆகஸ்ட் 16 அன்று வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆவணம் வெளியிடப்பட்டது. அதன் விளைவாக, தலித்துகளுக்கு அ) தனியான ஒரு வாக்காளர் தொகுதி கிடைத்தது. இதன் விளைவாக தலித் வாக்காளர்களை மட்டுமே கொண்ட தொகுதியில் தலித்துகள் தங்கள் பிரதிநிதியை சட்டசபைக்குத் தேர்ந்தெடுப்பார்கள். ஆ) சாதி இந்துக்களில் தங்கள் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர் யார் எனப்பார்த்து அவருக்கும் இரண்டாம் வாக்குப் பதிவு செய்து தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றனர். இப்படிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தலித்துக்களுக்கு அவசியம் என்று அம்பேத்கர் வாதிட்டார். ஏனெனில் அவர்கள் மற்ற சிறுபான்மையினரைப் போன்றவர்களல்ல. அவர்களது நிலையே தனி. அவர்கள் எங்கிருந்தாலும் ஆதிக்க சாதியினரே அவர்களைச் சுற்றிலும் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தனர். உடல் ரீதியாக தலித்துகள் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலையில் இருந்தனர். வெறும் வாக்களிக்கும் உரிமை மட்டுமே ஆதிக்க சாதியினரின் கொடுமைகளில் இருந்து தலித்துகள் தப்பிக்கும் வழியாகாது என்று அவர் நினைத்தார். இரட்டை வாக்குமுறையின் மூலம் அனைவரும் ’தீண்டத்தகாதவர்களை’ மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்துவர் என்பதே எதார்த்தமான நிலை.

ஆனால் தலித்துக்களுக்கு நன்மை பயக்கும் இவ்விஷயங்களை மஹாத்மா காந்தி தன் புகழ்கெடுக்கும் பூனா, எரவாடா உண்ணாவிரதத்தின் மூலம் கெடுத்தார். தலித்துகளும் இந்து சமூகத்தின் ஒரு அங்கம்தான், எனவே அவர்களுக்கென தனியானதொரு வாக்குத்தொகுதி தேவையில்லை என்ற விவாதம், நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், நான் உண்ணாவிரதமிருந்தே சாவேன்’ என்ற மிரட்டலுக்குச் சமமாகும்.

இந்த மாதிரியான மிரட்டல்களுக்கு மத்தியில், பூனா உடன்படிக்கையில் செப்டம்பர் 1932ல் கையெழுத்திட அம்பேத்கர் வலியுறுத்தப்பட்டார். அம்பேத்கர் இயக்க வரலாற்றாசிரியர் பகவன் தாஸ் கூறுவதுபோல, “அது தீண்டத்தகாதவர்களுக்கு அதிகமான எண்ணிக்கையிலான இடங்களைக் கொடுத்தது, ஆனால் உரிமைகளையும் அதிகாரத்தையும் கொடுக்கவில்லை” என்று கூறினார்.

ஆனால் அம்பேத்கர் எளிதில் விட்டுவிடவில்லை. தலித்துகளுக்கு மட்டுமின்றி எல்லா சிறுபான்மையினருக்குமான உரிமைகளைப் பெறுவதற்காக அவர் தொடர்ந்து போராடினார். FPTP தேர்தல் முறையில் சாதி அமைப்பு முறையினால் ஏற்படும் மோசமான விளைவுகளைப் பற்றி அவர் கவலை கொண்டார். அனைத்திந்திய பட்டியலின சாதி கூட்டமைப்பு (All India Scheduled Caste Federation) சார்பாக மும்பையில் 6 மே, 1945ல் நடந்த கூட்டத்தில் அவர், இந்தியாவில் பெரும்பான்மை என்பது அரசியல் பெரும்பான்மை அல்ல. இந்தியாவில் பெரும்பான்மை பிறக்கிறது. உருவாக்கப்படவில்லை. சாதி ரீதியான பெரும்பான்மைக்கும் அரசியல் பெரும்பான்மைக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் என்று பேசினார்.

இதே பொருள் குறித்து, 1955ல் மீண்டும் பேசியபோது, பெரும்பான்மை என்பது இரு வகைப்பட்டது, சாதி ரீதியான ஒன்று, அரசியல் ரீதியான இன்னொன்று என்று கூறினார். அரசியல் ரீதியான பெரும்பான்மையின் உள்ளடக்க வகுப்புகள் மாறுதலுக்கு உரியது. அரசியல் ரீதியான பெரும்பான்மை வளர்ச்சி அடையும் பண்பாட்டை கொண்டது. சாதி ரீதியான பெரும்பான்மை பிறப்பிலேயே வருகிறது. அரசியல் ரீதியான பெரும்பான்மையின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. ஆனால் சாதி ரீதியான பெரும்பான்மையின் கதவுகள் எப்போதும் மூடப்பட்டே இருக்கும். அரசியல் ரீதியான பெரும்பான்மையை உருவாக்கவும் கலைக்கவும் யாராலும் இயலும்.சாதி ரீதியான பெரும்பான்மை அரசியல் அந்த சாதிக்குள் பிறப்பவர்களால் உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் சாதியும் மதமும்தான் வாக்களிப்பதை நிர்ணயிக்கின்றன. ஒரு பெரும்பான்மைச் சமுதாயம், அது பெரும்பான்மையாக இருப்பதனாலேயே தேர்தலில் இடத்தை வென்றுவிடுகிறது. என்றார் பாபா சாஹிப். எனவே ஆளுவதற்காக அரசியல் பெரும்பான்மையிடம் கொடுக்கப்படும் உரிமைகளை சாதிப்பெரும்பான்மையால் எப்படி எடுத்துக்கொண்டு ஓடமுடியும் என அவர் ஆச்சரியப்படுகிறார்.

அம்பேத்கார் அதோடு நின்றுவிடவில்லை. இன்னும் பலபடிகள் முன்னே சென்றார். பல உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பெரிய தொகுதி பெரும்பான்மையினருக்கே பாதுகாப்பளிக்கும் என்று கூறினார். “ஒரு கூட்டு தொகுதியில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு அதிக இடங்களைக் கொண்ட பெரும்பான்மையினர் வசம் உள்ளது. இல்லையெனில் பெரும்பான்மையினரால் அது நசுக்கப்படும்” என்று கூறினார். பூனா உடன்படிக்கையின் போது தனி நபர் தொகுதிகளுக்கு பதிலாக, மூன்று நான்கு பேர் போட்டியிடும் தொகுதிகள் உருவாக வேண்டும் என்று அவர் வாதிட்டார். பாபா சாஹிப் குறிப்பிட்ட இப்படிப்பட்ட தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் பல உறுப்பினர்கள் வருவார்கள் (ஒரு தொகுதியிலிருந்து ஐந்திலிருந்து பத்து பேர் வரை இருக்கலாம்) என்பதுவே இன்று நாம் பேசும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையின் அடிப்படையாகும்.

விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்ற சொல்லாடலோ அது பற்றிய சிந்தனையோ இல்லாத ஒரு காலகட்டத்தில் இப்படிப்பட்ட ஒரு சூழலை அம்பேத்கர் 1930களிலேயே கற்பனை செய்தார் என்பது வியப்புக்குரியது. இந்த முறையின் கீழ் ஒவ்வொரு கட்சியும் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிடும். இந்த பட்டியலின் அடிப்படையில் வாக்காளர்கள் தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிப்பார்கள். மொத்தமுள்ள வாக்குகளில் கட்சிகளுக்கு கிடைக்கும் வாக்கு விகிதாச்சாரத்தின் அடிப்படையில் அவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும். இந்த பட்டியல் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையால் சமூகச் சிறுபான்மையினர், இனச் சிறுபான்மையினர், மொழிச் சிறுபான்மையினர், மதச் சிறுபான்மையினர் மற்றும் பண்பாட்டுச் சிறுபான்மையினர் ஆகிய சிறு குழுக்கள் பிரதிநிதித்துவம் பெற வாய்ப்புள்ளது. பட்டியல் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையினால் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை குழுக்கள் இடம் பெறுவதை உறுதி செய்ய முடிகின்றது.

ஆங்கிலேயர்களின் சிந்தனையிலிருந்து இன்னும் நாம் விடுதலை பெறவில்லை விடுதலைப் பெற்ற இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது விகிதாச்சார தேர்தல் முறை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பட்டியல் சாதியினருக்கு தனித் தொகுதிகள் அமைவதற்கு மட்டுமே வழிவகுக்கப்பட்டது. இது ஆச்சரியத்திற்குரியது அல்ல. ஆனால் மாற்று தேர்தல் முறைகளைப் பற்றிய சிந்தனை இல்லாமலிருந்தது குறிப்பிடத்தக்கது. அரசியல் அமைப்பு சாசனம் உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் ஆங்கில அமெரிக்க மாடல் குடியரசுகள்தான் முன்னுதாரணங்களாக நமக்கு முன்னே இருந்தன. இன்றுவரை அப்படித்தான் உள்ளது. இதுவும் ஆச்சரியமானதல்ல. ஏனெனில் ஆங்கிலேயர்களின் அரசியல் ஆதிக்கம் நமது நாட்டில் முடிவடைந்தாலும் அவர்கள் நாட்டை விட்டு சென்றாலும் இந்தியர்களின் சிந்தனையில் இன்னும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

உயிரூட்டமுள்ள ஜனநாயகத்தில் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முறைமை மிகவும் இன்றியமையாததாகும். இருப்பினும் தேர்ந்தெடுப்பு முறைமைகள் குறித்து விவாதங்கள் அற்பசொற்பமாகவே நடைபெறுகின்றன. இன்று நாம் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை குறித்து விவாதிப்பது என்பது இந்திய தேர்தல் முறையில் அதிரடி மாற்றங்களை கொண்டு வருவதாக கருதப்படும். இருப்பினும் இந்த மாற்றம் தனது வாழ்நாள் முழுவதும் பெரும்பான்மையினரின் கொடுங்கோன்மையை வீழ்த்துவதில் முன்னணியில் நின்ற, அதை வெல்லப் போராடிய பாபாசாஹிபின் ஆன்மாவின் குரலை எதிரொலிப்பதாக இருக்கும்.இப்போதுள்ள தேர்தல் அமைப்பில், பெண்களுக்கோ, தலித்துகளுக்கோ தனி தொகுதி ஒதுக்கீடு செய்வதன் மூலம் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. ஒரு தொகுதியை அவர்களுக்காக ஒதுக்கினாலும் சரி, அல்லது அரசியல் கட்சிகள் தங்களுக்கான இடங்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை அவர்களுக்காக ஒதுக்க வேண்டும் என்று வரையறுத்திருந்தாலும் சரி.விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையில் (பி.ஆர்.எஸ்) நடத்தப்படும் தேர்தல் அமைப்பே இந்திய ஜனநாயக அமைப்பில் இருக்கும் எல்லாவிதமான நோய்களையும் தீர்க்கும் அருமருந்தாக அமையும். பி.ஆர்.எஸ். அமைப்பானது ஐந்திலிருந்து ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பல இடங்களைக் கொண்ட தொகுதிகளையே பயன்படுத்துகிறது. எளிமையாகச் சொல்வதானால், இந்த அமைப்பில், அரசியல் கட்சிகள், தங்கள் வேட்பாளர்களின் பெயர்ப்பட்டியலைக் கொடுக்கிறது. மூடப்பட்ட பெயர்ப்பட்டியல் அமைப்பில், வாக்காளர்கள் தாங்கள் விரும்பும் கட்சிகளை மட்டும்தான் தெரிவு செய்ய முடியும். திறந்த பெயர்ப்பட்டியல் வடிவத்தில், அவர்கள் தனி நபர்களுக்கு வாக்களிக்கலாம். அதன் மூலமாக கட்சியில் அவர்களின் அந்தஸ்தை வரையறுக்க முடியும். இது அதிகமான ஜனநாயகத்தன்மை கொண்டது. ஆனால் இரண்டு விதமான செயல்பாடுகளிலுமே, வாக்களிப்பட்டுவிட்டால், அதன் அடிப்படையில், ஒவ்வொரு கட்சிக்கும் எம்.பி.க்கள் இத்தனை பேர்தான் என்பது வரையறுக்கப்பட்டுவிடுகிறது. உதாரணமாக, ஐந்துபேர் கொண்ட ஒரு தொகுதியில், அ என்ற கட்சிக்கு 40 விழுக்காடு வாக்குகளும், ஆ என்ற கட்சிக்கு 20 விழுக்காடு வாக்குகளும் விழுந்தால், அந்த தொகுதியில் இருந்து அ கட்சி சார்பாக இரண்டு எம்.பி.க்களும், ஆ கட்சி சார்பாக ஒரு எம்.பி.யும் வருவர். ஒரு FPTP அமைப்பில் ஆ கட்சி (சிறுபான்மைக்கட்சி) ஒரேயடியாக ஓரங்கட்டப்பட்டுவிடும். ஆனால் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ அமைப்பில் அதன் மக்கள்தொகை விகிதாச்சாரத்துக்கு ஏற்ற வகையில் எம்.பி.க்களும் கிடைப்பர்.

விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ அமைப்பு விளங்குவதற்குக் கடினமானதாகத் தோன்றலாம். ஆனால் நடப்பில் அது மிகவும் எளிமையானதுதான். மற்ற அமைப்புகளைவிட இது சிறப்பாக வேலை செய்கிறது. சிறுபான்மையினர் அமைப்புகளுக்கும் அவர்களது அரசியல் கருத்துக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க இது உதவுகிறது. ஆனால் FPTP அமைப்புதான் இயல்பானது என்று இந்தியர்களும் அமெரிக்கர்களும் நினைக்கின்றனர். அது சிறுபான்மையினரை அடியோடு இல்லாமல் மூடிவிடக்கூடிய தன்மை கொண்டது. அமெரிக்காவில் நடப்பது இதுதான். கருப்பின மக்களைப் போன்ற சிறுபான்மையினரை மட்டும் இது பாதிக்கவில்லை. அவர்களது அரசியல் கருத்துக்களையும் பாதிக்கிறது. அங்குள்ள ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளின் ஆதிக்கத்தை அது உறுதி செய்கிறது. மூன்றாவதாக எந்த ஒரு அணியும் உருவாவதை அது அனுமதிப்பதில்லை.

பாபா சாஹிப் சொன்னது போல, கனவு கண்டது போல, விகிதாச்சார தேர்தல் முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்தினால் அது நம் நாட்டில் ஆதிக்க வர்க்கத்தை நடுங்க வைக்கும். அவர்களது அமைதியை குலைக்கும். காலஞ்சென்ற முஸ்லிம் லீக் தலைவர் குலாம் முஹம்மது பனாத்வாலா அவர்கள் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையை நாட்டில் செயல்படுத்த வேண்டும் என்று ஒரு தனி நபர் மசோதாவை ஜூலை 2003ல் மக்களவையில் கொண்டு வந்த போது அப்போதிருந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அதை கடுமையாக எதிர்த்தது. அப்போதிருந்த சட்ட அமைச்சர் அருண் ஜெட்லி, பனாத்வாலா அவர்களின் சட்டமுன்வடிவை நிராகரித்தார். அது நிலையற்றதன்மையை ஏற்படுத்தும் என்றும் ஜனநாயகத்தை அது காயப்படுத்தும் என்றும் அவர் வாதிட்டார். விகிதாச்சார பிரதிநிதித்துவம் கொள்கையை கூறுபோடும் என்றும், ஏகப்பட்ட அரசியல் கட்சிகள் அதன் மூலமாக ஆதரிக்கப்படலாம் என்றும் அவர் சொன்னார்.

அரசியலில் சிறுபான்மையினரும் பலவீனமானவர்களும் அவர்களுக்கு உரிய இடத்தைப் பெற்றுவிடக்கூடாது என்ற அவர்களுக்கு எதிரான தன் பகையை ஜெட்லியின் எதிர்ப்புப் பேச்சு வெளிப்படுத்தியது. அமெரிக்காவைப் போல் இந்தியாவிலும் இரண்டு கட்சி ஆட்சி முறை தான் இருக்க வேண்டும் என்ற சங்பரிவாரின் உள்ளகிடக்கையைத் தான் அவர் பிரதிபலித்தார். அமெரிக்கவின் முன்மாதிரியை அவர்கள் விரும்பவதில் ஆச்சரியமில்லை. முதலாளிகளின், எஜமானர்களின் நலன்களைப் பாதுகாக்கும் அத்தகைய முறைக்கு மாறினால் பொறுப்பான மக்களுக்கு பதில் சொல்கின்ற இந்திய நாடாளுமன்றத்தை நாம் பார்க்க இயலாது. நமது தேர்தல் முறையில் பெரும் பண முதலைகளின் ஆதிக்கத்தை குறைக்கவேண்டுமெனில் நிச்சயமாக தேர்தல் முறையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.

ஜெட்லி, சசிதரூர் போன்ற தனி நபர்களால் முன்மொழியப்படும் அமைப்பு அமெரிக்காவில் உள்ளது போன்ற இரு கட்சி ஆட்சி அமைப்பாகும். அதன் மூலமாக பிரச்சனைகள்தான் அதிகமாகும். இந்தியாவின் பிரச்சனைகளில் கார்ப்ரேடுகள் என்னும் வல்லாதிக்க பணமுதலைகள் முடிவெடுக்கும் நிலை ஏற்படும். ஊடகங்களைப் பயன்படுத்தி தேர்தல் காலங்களில், தேர்தல் களங்களில் இப்படித்தானே நடந்துகொண்டிருக்கிறது என்பதை நாம் பார்க்கவில்லையா? அமெரிக்க மாடலுக்கு போகவேண்டும் என்ற கருத்தை நாம் நிராகரிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள பலதரப்பட்ட மக்களுக்கும் பொருந்துமாறு ஒரு அமைப்பை நாம் உருவாக்க வேண்டும். அது அனைத்து இந்தியர்களின், குறிப்பாக சிறுபான்மையினரின் நலன்களைப் பிரதிபலிப்பதாகவும், பாதுகாப்பதாகவும் இருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் விகிதாச்சார தேர்தல் அமைப்பைத் தவிர வேறொன்றாலும் இந்த இலக்கை அடைய முடியாது. மற்ற எல்லாமுமே தனி நபர்களுக்கு அதிகாரத்தை வழங்குவதாகவே இருக்கும்.

நெல்சன் மண்டேலா செயல்படுத்தியதும் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை தான் அமெரிக்காவில் பி.ஆர். அமைப்பை உருவாக்க அங்குள்ள கருப்பின மக்கள் போராடிவருவது தற்செயலானதல்ல. அதன் மிகமுக்கிய தலைவரான லானி கூனியர் இதற்காக போராடி வருகிறார். 1995, 97ல் அமெரிக்க காங்கிரசில் இதை நோக்கி மசோதாக்களை அறிமுகப்படுத்தியவரும் கருப்பினத்தைச் சேர்ந்த சிந்தியா மெக்கின்லீ என்பவர்தான். கருப்பின கன்சர்வேட்டிவ்களான முன்னால் அமெரிக்க தலைமை நீதிபதி திரு க்ளாரன்ஸ் தாமஸ் போன்றவர்களும் இதை ஆதரித்துப் பேசியுள்ளனர். தென்னாப்பிரிக்காவில் இன வெறி ஆட்சி முடிவுக்கு வந்து நெல்சன் மண்டேலாவின் தலைமையில் மக்கள் அரசு அமைக்கப்பட்ட போது விகிதாச்சார தேர்தல் முறையைத் தான் அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். இந்த தேர்தல் முறையில் வெள்ளை நிற சிறுபான்மையினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வழிவகுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய தேர்தல் முறையில் பெண்களுக்கு உரிய இடங்கள் கிடைக்காது பெண்களுக்கு அரசியல் ரீதியாக இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக நமது நாட்டில் நீண்ட காலமாக விவாதம் நடைபெற்று வருகின்றது. விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையில் தான் பெண்களுக்கு அதிகமான பிரதிநிதித்துவம் உள்ளது. விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் முறை நடைமுறையில் இருக்கும் ஐரோப்பிய நாடுகளின் சட்டமியற்றும் அவைகளில் 25-40 விழுக்காடு பெண்கள் பங்குபெறுகிறார்கள். அவர்கள் அங்கே உண்மையான பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். 2010 பிப்ரவரி வாக்கில், ஸ்வீடன் நாடாளுமன்றமான ரிக்ஸ்டாக்கில் 44.7 விழுக்காடு பெண் உறுப்பினர்கள் உள்ளனர். தென்னாப்பிரிக்காவில் 42.3 விழுக்காடு பெண் உறுப்பினர்கள் உள்ளனர். ஸ்வீடனிலும் தென்னாப்பிரிக்காவிலும் பெண்களுக்கென்று தனி இட ஒதுக்கீடு முறை இல்லை. ஆனால் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு மாறாக, அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற தொழில் வளம் மிக்க நாடுகளில் பழைய காலாவதியான FPTP அமைப்புதான் உள்ளது. 2012ல் பெண்களின் பிரதிநிதித்துவம் அவர்களது பாராளுமன்றங்களில் முறையே 16.8, 22.3, 24.8 விழுக்காடுகளாக மட்டுமே இருந்தன. இந்தியாவில் 11 விழுக்காடு மட்டுமே (545க்கு 60 பெண்கள் மக்களவையிலும்) 10.7 விழுக்காடு (243க்கு 26 பேர்) மட்டுமே மாநிலங்களவையிலும்) இருக்கின்றனர். விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை சமூக சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல அரசியல் சிறுபான்மையினருக்கும் கருத்து ரீதியான சிறுபான்மையினருக்கும் அதிகாரம் வழங்குகிறது. எனவே தான் அமெரிக்காவில் க்ரீன்ஸ் மற்றும் லிபர்டேரியன் கட்சி போன்றவை விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் முறையை ஆதரிக்கின்றனர்.

தற்போது உள்ள FPTP அமைப்பின்படி, பெரும்பான்மையான வாக்காளர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமலே போகிறது. உபியில் சட்டசபைத் தேர்தல்களில் 2012ல் சமாஜ்வாதி கட்சி 226 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால் மொத்த வாக்குகளில் அதற்கு கிடைத்தது 29.3 விழுக்காடுதான். அந்த கட்சிக்கு எதிராக வாக்களித்த 70.7 விழுக்காடு மக்களுக்கு ஏதாவது மரியாதை உள்ளதா? 25.9 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற பகுஜன் சமாஜ் கட்சி 80 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியை இழந்தது. தற்போது நடைமுறையில் உள்ள FPTP தேர்தல் முறையில், தமிழகத்தில் கடந்த 2006ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 32.6 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற அதிமுகவிற்கு 61 சட்டமன்ற உறுப்பினர்களும் 26.5 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற திமுகவிற்கு 96 சட்டமன்ற உறுப்பினர்களும் கிடைத்தனர். 2001ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவும், திமுகவும் தலா 31 விழுக்காடு வாக்குகள் பெற்றாலும் அதிமுகவிற்கு 132 இடங்களும், திமுகவிற்கு 31 இடங்களும் கிடைத்தன. இந்த முரண்பாடுகள் களையப்பட வேண்டும் என்பதினால் தான், தற்போதைய தேர்தல் அமைப்பு non-inclusive என்றும், அனைத்துத் தரப்பு மக்களின் எண்ணத்தை அது பிரதிபலிக்கவில்லை என்றும் முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் ஜெ எம் லிங்க்டோ கருத்து வெளியிட்டுள்ளார்.

2012 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஏழு முஸ்லிம் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தியது.. பாஜக எந்த ஒரு முஸ்லிமுக்கும் இடம் தரவில்லை. காங்கிரஸைச் சேர்ந்த இரண்டே முஸ்லிம்கள் தேர்தலில் வென்றனர். இது 182 பேர் இருக்கும் சபையில் 3.64 விழுக்காடு மட்டுமே. குஜராத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் தொகைக் கணக்குப்படி, குறைந்தது 18 முஸ்லிம் எம்.எல்.ஏக்களாவது குஜராத் சட்டசபையில் இருந்திருக்க வேண்டும். வதோதரா போன்ற பெரிய நகரங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு முஸ்லிம் பிரதிநிதி கூட இல்லை. கடந்த 20 ஆண்டுகளாக ஒரு முஸ்லிம் கூட குஜராத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட வில்லை.

அம்பேத்கர் பயந்தது உண்மையாகிவிட்டது: சாதி ரீதியான பெரும்பான்மையே அரசியல் ரீதியான பெரும்பான்மையாகிறது. சிறுபான்மையினருக்கு நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இதற்கான தீர்வு இல்லை. சிறுபான்மையினர் பெரும்பான்மையினரால் அடக்கப்படுகிறார்கள்; ஒடுக்கப்படுகிறார்கள்; நசுக்கப்படுகிறார்கள். இது அம்பேத்கரின் கூற்றுப்படி ஜனநாயகமே அல்ல. மொத்த மக்கள் தொகையில் அவர்களது விகிதாச்சாரத்தின்படி, பட்டியலின சாதியினரும் பழங்குடியினரும் ஒதுக்கப்பட்ட தனியிடங்களை அனுபவிக்கலாம்.ஆனால் அவர்கள் பெரும்பான்மையினரின் நலன்களுக்கேற்ப இணங்கி நடந்துகொள்ள வேண்டிவரும் என்பதை தனி தொகுதிகளும் FPTP தேர்தல் முறையும் உறுதி செய்கின்றன.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் சிறுபான்மையினர்’ கணிசமான எண்ணிக்கையில்லாத (வாக்கு வங்கியாக இல்லாத) சிறுபான்மையினரை ஒதுக்கவோ அடக்கவோ நேரிடலாம் என்றும் அம்பேத்கர் மிகச் சரியாக அஞ்சினார். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை நினைத்து அவர் மிகவும் கவலைப்பட்டார். எனவே அப்படி நடப்பதைத் தடுக்கும் விதமாக அவர் தொகுதிகளைப் பிரித்துக் கொடுக்கும் முறை பற்றிப் பேசினார். இவ்விதமான பகிர்வு, எல்லா சிறுபான்மையினரும் ஒன்று சேர்ந்தால், பெரும்பான்மையினரின் சார்பு இன்றி, தாங்களாகவே அரசமைக்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்.

அம்பேத்கர் கனவு கண்ட தேர்தல் முறை 89 நாடுகளில் நடைமுறையில் உள்ளது FPTP அமைப்பை அவர் எப்போதுமே விரும்பியதில்லை. ஏனெனில் அதில் சாதி ரீதியாக பெரும்பான்மையாக இருப்பவர்களால் அரசியல் ரீதியாகவும் பெரும்பான்மையாக எளிதில் மாறிவிடமுடியும். ஒற்றை மாற்று வாக்கு முறை ( Single Transferable Vote) என்று அறியப்படும் வாக்களிப்பு முறையையும் அவர் ஆதரித்தார். அதன் மூலம் தங்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு தேர்தலில் போட்டியிடுபவர்களை வாக்காளர்களால் தரவரிசைப்படுத்த முடியும். இதுவும் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தையே உறுதி செய்கிறது.

அரசியல் நிர்ணயச் சபை விவாதங்களில் அரசியல் அமைப்பை உருவாக்கிய இரண்டு பேரின் கருத்துக்கள் அம்பேத்கரின் கருத்துகளைப் பிரதிபலிப்பதாக இருந்தன.

சிறுபான்மையினர் உரிமைகள், நலன்களுக்கான ஒரு சிறப்பான பாதுகாப்பு விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையாகும் இது ஏற்கனவே பல நாடுகளில் அமுலுக்கு வந்துவிட்டது. அதனால், இவ்விதமான தேர்தல் அமைப்பு மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது. இது மேலும் உறுதியாகவும், பொறுப்பு மிக்கதாகவும் இருக்கும். இது விஞ்ஞானபூர்வமானதாகவும், ஜனநாயகத்தன்மை அதிகமாகக் கொண்டதாகவும் இருக்கிறது என்றார் மஹ்பூப் அலி பெய்க் சாஹிப் பகதூர்.

இந்நாட்டின் FPTP அமைப்பானது அபாயத்தை நிரந்தரப்படுத்துகிறது. இதற்கான ஒரே தீர்வு விகிதாச்சார அடிப்படையிலான பிரதிநிதித்துவம்தான். …தற்போதைய அமைப்பு உண்மையிலேயே வக்கிரமானதாக உள்ளது. அதி சிறப்பானதாக நான் கருதும் அமைப்பு பி.ஆர். அமைப்புதான். அது மதரீதியாக அமைந்ததல்ல. அது எல்லா சிறுபான்மையினருக்கும் பொருந்துவதாகும் என்றார் காஜி சையத் கரீமுத்தீன்.

தனி தொகுதிகளுடன் விடுதலைப் பெற்ற இந்தியாவின் முதல் தேர்தல் முடிவடைந்த பிறகு 27 ஆகஸ்ட், 1955ல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் நிலையை தலைகீழாக மாற்றும் தம் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகையில் பட்டியிலன சாதியினர் கூட்டமைப்பின் தலைவராக இருந்த அம்பேத்கார் கீழ்க்கண்டக் கருத்தை தீர்மானமாகவே வெளியிட்டார்.

தனி தொகுதிகள், அல்லது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் இனி இருக்கக்கூடாது. (இரண்டு அல்லது மூன்று உறுப்பினர்களைக் கொண்ட) பல்லுறுப்பினர் தொகுதிகளே போதுமானவை. அவற்றில் குழுமிய வாக்களிப்பு முறை இருக்கும். ஒரு உறுப்பினரை மட்டுமே கொண்ட தொகுதிக்கு பதிலாக இது இருக்கும். இது மொழிவாரியான மாநிலங்களில் உள்ள சிறுபான்மையினரின் அச்சங்களை இது போக்கும் ஜனநாயகம் செயல்படவேண்டுமானால் அம்பேத்கர் நம்பிக்கை வைத்த பல கோட்பாடுகளை நாம் திறந்த மனதோடு மறுபரிசீலனை செய்யவேண்டியது அவசியமாகிறது. அம்பேத்கரின் கோட்பாடுகள் சரியானவை என்பதை நிரூபிக்கும்வகையில் உலகில் உள்ள 89க்கும் அதிகமான குடியரசுகள் ஏற்கனவே FPTP அமைப்பிலிருந்து விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறைக்கு மாறிவிட்டன. இன்றைக்கு சுமார் 60 நாடுகள் மட்டுமே FPTP அமைப்பில் உள்ளன. உலகின் ஆகப்பெரிய குடியரசான இந்தியா, பல்வேறு கட்சிகளைக் கொண்ட இந்தியா, கூட்டணி அரசியலைக் கொண்ட இந்தியா விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை அமைப்பை ஏற்றுக்கொள்ளவேண்டிய காலம் கனிந்துவிட்டது. ஜனநாயகம் தழைக்க வேண்டுமானால், நாம் உடனடியாக FPTP அமைப்பிலிருந்து விடுபடவேண்டும். அதற்கு பதிலாக அம்பேத்கர் கனவு கண்ட விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை அமைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் அம்பேத்கரின் கனவு நனவாகும். அப்போது நரேந்திர மோடி போன்றவர்களினால் ஒரு ஊராட்சி தேர்தலில் கூட வெற்றிப் பெற முடியாது. சாதீய ரீதியிலான இன ரீதியிலான படுகொலைகள் செய்யப்படுவதற்கு ஏற்பாடு செய்யவோ திட்டமிடமோ துணைபோகவோ முடியாது.

comments powered by Disqus
விளம்பரம்